http://kavinjalam.blogspot.com

Poetry

Thursday, July 29, 2010

மனிதன் முகம் பார்க்கும் தேவலோகக் கண்ணாடி !

Moon in July Night

இதோ ..இரவின் இனிய தொங்கும் கனவு 
இயற்கை தந்த  ஒப்பற்ற விடிவிளககு...
பூமி புத்திரனின் அழகாய் மின்னும் அத்தை மகள்  மினுக்கி குலுக்கி வலம் வருவதை இங்கே பாருங்கள்...
இந்தியாவின் ஏதோ ஒரு கிரிக்கெட் மைதானத்தில்
பூவா தலையா போட்டுப்பார்த்த
வெள்ளி நாணயம் ஒன்று பறந்தோடி..
விண்ணிலே போய்
ஒட்டிக்கொண்டு விட்டதை
சற்று தலை தூக்கி விண்ணில் காணுங்கள்...

வானப்புலவன் வடித்த  அந்தியின் கவிதைகளுக்கு கிடைத்த
அற்புதக் கைதட்டலா ...இந்த நிலா?

இரவு என்ற காதலன் பூமி நங்கைக்கு
கைதட்டி செய்து கொடுத்த காதல் சத்தியம் இது தானா.?..

மேலும்..
மேக மந்தைகளை மேய்த்து தினம் நம்மை  ஆசிர்வதிக்கும் நிலா ..ஒரு தேவ மேய்ப்பனா.?.

ஆயிரம் கோடி நட்சத்திரபபடைகளை முன்னின்று நடத்தி வரும்  அலெக்ஸாண்டர் இணையான அயராத போர் தளபதியா?


நிலா ஹெலன் கிளியோபாட்ரா  , ஐஸ்வர்யாராய் போன்ற ஒரு அழகியா..
உலக அழகிக்கெல்லாம் அழகியா..
இல்லையெனில்.....
..இத்தனை நட்சத்திரஙக ரசிகர்கள் இவளைப்பார்த்து
கண்ணடித்து கொண்டிருக்க காரணம் ஏது?.

வானின் வளர்ப்பு மகளோ இந்த வெள்ளி நிலா?..

மனிதன் தினம் தன் முகம் , அகம் பார்க்கும் தேவலோகக் கண்ணாடியா ?

இதோ பாருங்கள்.. ,இரவின் காட்டில் இந்த அழகிய  இளவரசி சிக்கித்  திசையின்றித் தவிப்பதை!

நிலா நித்திய கன்னிகையா
இல்லையெனில்..
எனது கொள்ளுப்பாட்டனுக்கும் , எனக்கும்
அவளே காதலியாய் ஆகியதெப்படி?

அவளை காதலித்து  மணந்து கொண்டது ..மானுடம்..
நிலா.
இந்த பிரபஞ்ச வெளியில்  பால் சொட்டும் தாயின் மார்பகம்!


நவீன் பாரதி


Sunday, July 25, 2010

கானகம் வாழ்ந்த மனிதனின் ‘ஒரு பக்கம்’

Western Ghats_Rainforest

மலைச்சிறுமி தன்னை சுற்றி கட்டிய பட்டுப் பாவாடை போல

தக தகக்திருக்கும் மழைக் காடுகள்...

அதனூடே கால் பதித்து நடந்த காலங்கள் நலம் என இன்றும்

மனம் விசும்புகிறது

ஆங்கே ...ஆனைக்கூட்டம் வந்து போன அரவம் தெரிகிறதே!

மரங்களின் பட்டைகளை துகிலுரித்து...

சானத்தை `பொத்’ `பொதுக்’ என அதன் அருகில் இட்டு ...

ஆனைகள் அங்கு தங்கலிட்டுத்தான் சென்றுள்ளன.


அது ஒரு இறைமை தோய்ந்திருக்கும் இடை விடாத மவுனம்

இசைத்திருப்பது பறவைகள் மட்டுமே ஆங்காங்கே...

அதுவே கானகம் என்றால் மிகையல்ல!


புலியின் கால்தடத்தை உடன் மண்டியிட்டு அமர்ந்து நோக்கிய போது

எனோ புல்லரித்தது..

`உடன் இங்கிருந்து சென்று விடல் நலம்’

என மனித மனம் எச்சரித்தது

சாரல்மழை தீரல்கள் சட்டென முகம் நனைக்கும் மயாஜாலம் அங்கே நிகழ்ந்தது..

கானகம் என்னைக்கட்டிக்கொள்ள ஒரு குழந்தை போல நானும் அதனுடன் ஒட்டிக்கொண்டேன்

அந்த ஒரு நொடியில் ஏகலைவனின் திடம் பிறந்தது

பயம் என்ற பாம்பு புதருக்கு ஓடி மறைந்தது


கரடியின் பாதையில் மனிதன் போவதை கரடி கண்ணுறவில்லை

மனிதனின் பாதையில் கரடி கவிழ்ந்து நடந்து வந்ததை நானும் கண்ணுறவில்லை

முன்னே நடந்த ஆதிவாசி கை கால்ளை காற்றில் வீசி ஒலியெழுப்ப

மறு ஒலி எழுப்பி ஓடியது கரடி

கானகம் வாழ்ந்த மனிதன் கற்றுக்கொண்ட பாடத்தின் `ஒரு பக்கம் ’

இவை தானோ என ஒரு நொடி யோசித்தேன்.


நவீன் பாரதி