http://kavinjalam.blogspot.com

Poetry

Sunday, August 22, 2010

தக்கித் தகிதிடதோம் என தாளமிட்டு வந்தது மழை!


வந்தது வந்தது ....
வடகிழக்கு பருவ மழை!

வானம் இருண்டு முகம் சுழித்து..
பூமி தனை நனைத்து மகிழ
தக்கித் தகிதிடதோம்
என தாளமிட்டு வந்தது மழை!

வானம் தன் கருமேகக் கைகளால்
பூமிப் பெண்ணை
ஆரத் தழுவி
புணர்கிறது..

வ்ந்தது வந்தது
வட கிழக்கு பருவ மழை..

பெய்த மழை பாடுது.
காற்றின் ஜதியில் நடனம் ஆடுது..
மரங்களை, மனிதரை
மண்ணில் மறைந்த நுண்ணுயிரைக் கூடுது..
சிறுவர்கள் ரசிக்கும்
சிற்றாறுகளாய் நுரைத்து சிரித்து ஓடுது..

மயக்கும் மரங்களில் ..
களைத்த பாதசாரி முகங்களில்.
குதூகலிக்கும் குழந்தைகள் மனங்களில்
பன்னீர் பூச்சொரிதல்
 நிகழ்த்திக்காட்டுகிறது.


சிலர் வீட்டு சாளரங்கள் சட்டென திறக்கின்றன
சிலர் வீட்டு சாளரங்கள் சட்டென மூடிக்கொள்கின்றன.

பல் உயிர்கள்
மழையில் நனைந்து மகிழ..
மனிதன் மட்டும்
மழை கண்டு
முகம் சுழிப்பதேன்?

ஐயகோ..

மழை ` நலமா..?’ என
குசலம் கேட்பது  நம்மை
நனைத்துத்தானய்யா...

`நலமே’ என
நாம் நட்பாய் சொல்வதும்
 வ்ந்த நண்பனை
மார்போடு கட்டி அணைத்துத்தானய்யா.

வந்து வாழ்த்தும் மழையில்
நனைந்து மகிழாத மனிதன் ஒருவன்
இருக்கக் கூடாது
அப்படி மகிழாதவன்
 மனிதனாகவே  இருக்க முடியாது

மழை வந்த பொழுதில்..
மண்ணில் ஒரு மாயாஜாலம் நிகழ்திக் காட்டுகிறது
மண் சாலைகள் வெட்கிச்சிவக்க.
தார் சாலைகள் கருப்பு அழகிகளாக
மாறிப் போகின்றன.
மரங்கள் காதலனைக் கண்ட காதலி போல்
மலர்ந்து சிரித்து நிற்கின்றன.

கட்டிடங்களை குளிப்பாட்டும் தாய் மழை
வெற்றிடங்களை கழுவி சுத்தம் செய்கிறது.

பருவ மழை ..
சூரியனின் முக்த்தை ,ஒரு கையால் மறைத்துக்கொண்டு
மறு கையால்
வாரி வாரி
மாரி தனை வழங்குகிறது.

`மான்சூன்’ மட்டும்
சூலை மாதத்தில்
சூல் கொண்டு
ஆகஸ்ட் மாதத்தில்
அடித்துப் பொழியவில்லையென்றால்
தீபகற்பவாசிக்கு
திருவிழா ஏது
பெருவிழா ஏது?

அலை அலையாய்..
மழை வந்து விழவில்லையெனில்
மனித வாழ்வும், மற்ற  வாழ்வும்
பிழைப்பதேது..?

வறட்சி என்ற அழையா விருந்தாளி
வ்ந்தமர்ந்து..
குளம் குடடைகளில்..
`கேக்’ வெட்டி
தன் பிறந்த நாளை கொண்டாடும்
அவலம் அங்கு அரங்கேறும்


கோடான கோடிஆண்டுகளுக்கு முன்னால்..
பெய்ததோர்  யுகப் பெருமழை!
ஆங்கே  உயிர்பித்து உய்ந்ததே .. இவ் உலகு

ஒரு செல் உயிர்கள் கடலில் தோன்றிப்
பின் பாலினம் வரையில் பல்கிப் பெருகின
மனிதன் என்ற மாண்பைச் சூடின

மழை அதிகம் பெய்தால்
காவிரிக் கரையில் பயிர் மூழ்கும்
லேயில் ஊர் மூழ்கும்..
இல்லையெனில்
உலக மனிதரின் மொத்த உயிர் மூழ்கும்!

நவீன் பாரதி

Friday, August 20, 2010

விரல் நீள ஹிட்லர்

புகைத்துக் கொல்லும்

`நான்கு அங்குல’ தீவிரவாதி..


புற்று நோயின்

அழகிய அந்தரங்க காரியதரிசி


வெள்ளை உடுத்தி வரும்

இவள்..

உண்மையில்

பல உயிர்களைக் கொள்ளையிடும்
ச(ர்)ம்பல் கொள்ளைக்காரி!


உதட்டளவில் உறவாடிக் கெடுக்கும்

ஒரு போலி நண்பனை

ஒத்தவள்/ன்

இந்த மனப்புகைச்ச்ல் பேர்வழி


விரல் இடுக்கில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும்

இந்த`விலை மகள்`

இளைஞனின் உதடுகளை முத்தமிட்டு,,முத்தமிட்டு

தரும் சுகம்

ஒரு விலைமாதுவின் படுக்கையறையில் கிடைக்கும்

அற்ப சுகத்தினை ஒத்தது


இளைஞனே..

நீ உற்சாகமாய் உறிஞ்சி

உள்ளிழுத்துச் சுவைக்கும்

நிகோடின்
சிறுக சிறுக..

உன் உயிர் பருகும் விஷம்

என்பதை நீ அறிவாயா..?


ஆம்..


சுவாச மண்டலத்தை

சுக்கு நூறாய் உடைத்து விடும்

வக்கிர புத்திக்காரன் இந்த சிகரெட்..


ஒரு இனிய நண்பனைப்போல

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு

உறவாடும்

இந்த விரல் நீள ஹிட்லர்..

உன் மேல் படிப்படியாய்

ஆதிக்கம் செலுத்தி

உன்னை அழித்து விடும்

ஓர் சர்வாதிகாரிமனிதன்

புகைத்து எரிந்த ஒவ்வொரு சிகரெட்டும்

அவனது மொத்த ஆயுளின்

ஒரு நிமிடத்தை பறித்து விடுவதாய்

அறிவியல் ஆய்ந்து சொல்கிறது


எண்ணிப்பார்..

இந்த பூமியில் அப்படி

நீ இழந்த இனிய பொழுதுகள்

எத்தனை என்பதை


வேண்டாம் சிகரெட்..

அது உனது உயிருக்குள்

செய்து விடும்

பவர் கட்..


ஒரு மனிதாபிமானமிக்க கடைக்காரர்

என்னிடம் சொன்னார்

`இனி தேநீர் மட்டும் அருந்துங்கள்

சிகரெட் வேண்டாம்’


அணுகுண்டு வீச்சில் அழிந்தன

ஹிரோஷிமா நாகசாகி

தினம் புகைத்துவீசப்படும்

அற்ப சிகரெட் துண்டுகளால்

அழிகின்றனர்

லட்சோபலட்ச

ஹிரோஷினிகள்..
நாகசாமிகள்...


கடைசியில்..


சிகரெட் பெட்டிகள்

செங்கற்களாய் சேர்த்து

அடுக்கப் பட்டுத்தான்

புகைப்பவனுக்கான

சவப்பெட்டி ஒன்று

தயாராகிக் கொண்டிருக்கிறதா..?

Saturday, August 7, 2010

இலைகள் இயற்கையின் கட்சி கொடிகள் போல் பட படக்கும் ஆயிரம்.அரச மரம் .. அரச மரம்…பெரிதாக வளர்ந்த மரம்.
அரசன் போலும் கம்பீரமாய் நின்று நிமிர்ந்த மரம்..
இலைகள்... இயற்கையின் கட்சிக்கொடிகள்  கொடிகள் போல் பட படக்கும் ஆயிரம்.
ஊருணித்தண்ணியிலே உயிரு வளர்த்த மரம்.
ஊருப்பிள்ளைகள் ஓடி உறவாடி விளையாடும் மரம்.

இதயத்தின் உருவத்தில் இலை கொண்ட கலை மரம்.
வேர்கள் இருக்கைகள் போல் வெளித்தோன்றும் நிழற் கூடம்.

மரப்பல்லி, எறும்புக்கு பறவை ,துறவியற்கு மனை போன்ற துணை மரம்
சூரியன் போலவும் நின்று ஒளிர்ந்திடும் மலை மரம்.

படை கொண்ட வேந்தனைக் கண்டு பயந்தறியா பாமரம்
பாடும் பறவைகள் அமர்ந்து பயிற்சி பெறும் கோபுரம்.

புயல் வீச்சை எதிற்கொண்டு வென்றிடும் புஜபலத் தோள் மரம்.
பிள்ளை வரம் தருவதால் இது மரங்களில் ஆண்மரம்!
கவிஞனுக்கு காதல் மரம்..
களைத்தவனுக்கு சாமரம்..
புத்தனுக்கு போதி மரம்.
ம்ற்றவற்கு கோவில் கொண்ட புனிதம்.

அரச மரம் .. அரச மரம் .. பெரிதாக வளர்ந்த மரம்...
ஊருணித் தண்ணியிலே உயிரு வளர்த்த மரம்.
ஊருப்பிள்ளைகள் ஓடி உறவாடி விளையாடும் மரம்.!

நவீன் பாரதி.

Photo Courtesy : Makka Studios