http://kavinjalam.blogspot.com

Poetry

Sunday, August 22, 2010

தக்கித் தகிதிடதோம் என தாளமிட்டு வந்தது மழை!


வந்தது வந்தது ....
வடகிழக்கு பருவ மழை!

வானம் இருண்டு முகம் சுழித்து..
பூமி தனை நனைத்து மகிழ
தக்கித் தகிதிடதோம்
என தாளமிட்டு வந்தது மழை!

வானம் தன் கருமேகக் கைகளால்
பூமிப் பெண்ணை
ஆரத் தழுவி
புணர்கிறது..

வ்ந்தது வந்தது
வட கிழக்கு பருவ மழை..

பெய்த மழை பாடுது.
காற்றின் ஜதியில் நடனம் ஆடுது..
மரங்களை, மனிதரை
மண்ணில் மறைந்த நுண்ணுயிரைக் கூடுது..
சிறுவர்கள் ரசிக்கும்
சிற்றாறுகளாய் நுரைத்து சிரித்து ஓடுது..

மயக்கும் மரங்களில் ..
களைத்த பாதசாரி முகங்களில்.
குதூகலிக்கும் குழந்தைகள் மனங்களில்
பன்னீர் பூச்சொரிதல்
 நிகழ்த்திக்காட்டுகிறது.


சிலர் வீட்டு சாளரங்கள் சட்டென திறக்கின்றன
சிலர் வீட்டு சாளரங்கள் சட்டென மூடிக்கொள்கின்றன.

பல் உயிர்கள்
மழையில் நனைந்து மகிழ..
மனிதன் மட்டும்
மழை கண்டு
முகம் சுழிப்பதேன்?

ஐயகோ..

மழை ` நலமா..?’ என
குசலம் கேட்பது  நம்மை
நனைத்துத்தானய்யா...

`நலமே’ என
நாம் நட்பாய் சொல்வதும்
 வ்ந்த நண்பனை
மார்போடு கட்டி அணைத்துத்தானய்யா.

வந்து வாழ்த்தும் மழையில்
நனைந்து மகிழாத மனிதன் ஒருவன்
இருக்கக் கூடாது
அப்படி மகிழாதவன்
 மனிதனாகவே  இருக்க முடியாது

மழை வந்த பொழுதில்..
மண்ணில் ஒரு மாயாஜாலம் நிகழ்திக் காட்டுகிறது
மண் சாலைகள் வெட்கிச்சிவக்க.
தார் சாலைகள் கருப்பு அழகிகளாக
மாறிப் போகின்றன.
மரங்கள் காதலனைக் கண்ட காதலி போல்
மலர்ந்து சிரித்து நிற்கின்றன.

கட்டிடங்களை குளிப்பாட்டும் தாய் மழை
வெற்றிடங்களை கழுவி சுத்தம் செய்கிறது.

பருவ மழை ..
சூரியனின் முக்த்தை ,ஒரு கையால் மறைத்துக்கொண்டு
மறு கையால்
வாரி வாரி
மாரி தனை வழங்குகிறது.

`மான்சூன்’ மட்டும்
சூலை மாதத்தில்
சூல் கொண்டு
ஆகஸ்ட் மாதத்தில்
அடித்துப் பொழியவில்லையென்றால்
தீபகற்பவாசிக்கு
திருவிழா ஏது
பெருவிழா ஏது?

அலை அலையாய்..
மழை வந்து விழவில்லையெனில்
மனித வாழ்வும், மற்ற  வாழ்வும்
பிழைப்பதேது..?

வறட்சி என்ற அழையா விருந்தாளி
வ்ந்தமர்ந்து..
குளம் குடடைகளில்..
`கேக்’ வெட்டி
தன் பிறந்த நாளை கொண்டாடும்
அவலம் அங்கு அரங்கேறும்


கோடான கோடிஆண்டுகளுக்கு முன்னால்..
பெய்ததோர்  யுகப் பெருமழை!
ஆங்கே  உயிர்பித்து உய்ந்ததே .. இவ் உலகு

ஒரு செல் உயிர்கள் கடலில் தோன்றிப்
பின் பாலினம் வரையில் பல்கிப் பெருகின
மனிதன் என்ற மாண்பைச் சூடின

மழை அதிகம் பெய்தால்
காவிரிக் கரையில் பயிர் மூழ்கும்
லேயில் ஊர் மூழ்கும்..
இல்லையெனில்
உலக மனிதரின் மொத்த உயிர் மூழ்கும்!

நவீன் பாரதி

4 comments:

Thekkikattan|தெகா said...

பருவமழை பொருட்டு பல கவிதைகள் வாசிக்கும் கனம் தோரும் குதுகலம் குறைவதே கிடையாது. இந்த மழைக் கவிதை செய்திப் பூர்வமாகவும், ஏன் மழையை ரசித்து லயிக்க வேண்டுமெனவும் பொழிந்து நிற்கிறது...

//சிலர் வீட்டு சாளரங்கள் சட்டென திறக்கின்றன
சிலர் வீட்டு சாளரங்கள் சட்டென மூடிக்கொள்கின்றன.//

அது ரசனை பொருட்டு திறக்கும் மூடுமோ... அதுவும் மனித மனங்களுக்கு ஒரு அடையாளக் குறியீடாக நிற்கிறதோ :)


//மனிதன் மட்டும்
மழை கண்டு
முகம் சுழிப்பதேன்?//

அதானே ஏன் சுழிக்கிறோம்... மற்ற ஜீவாராசிகள் போலல்லாமல் இயற்கைத்தன்மையிலிருந்து நாம் விலகி செயற்கையாகி விட்டாதாலோ என்னவோ மழை கூட அமிலாமாகிப் போனது போல ...

நிறைய எழுதுங்கப்பூ!

மீன்துள்ளியான் said...

அருமையான கவிதை .. மழையில் நனைஞ்ச மாதிரி ஒரு உணர்வு .

cheena (சீனா) said...

அன்பின் பரத் உமாபதி

அருமையான கற்பனையில் விளைந்த அருமைக் கவிதை. உவமைகள் அருமை.

தாளமிட்டு வந்த மழை
பூமியினை புணர்ந்த மழை
நுண்ணுயிரையும் கூடும் மழை
சிற்றாறாய் சிரிக்கும் மழை
பன்னீர் பூச்சொரியும் மழை
சாளரங்களை திரக்கவும் மூடவும் வைக்கும் மழை
மனிதன் முகம் சுழிக்கும் மழை
நனைத்து நலம் கேட்கும் மழை
நனைந்து மகிழாத மனிதன் இல்லாது செய்யும் மழை
சுத்தம் செய்யும் மழை
மாரி வாரி வழங்கும் மழை
திரு விழாவின் கதாநாயகன் மழை
அளவுக்கு மிஞ்சினால அமுதமும் நஞ்சு

ஆம் பயிர் மூழ்கும் - ஊர் மூழ்கும் - மொத்த உயிரும் மூழ்கும் - பெரு மழை பெய்தால்

அட்டகாசமான - மிக நீளமான - கவிதை

ரசித்தேன் - மகிழ்ந்தேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Robert B Grubh said...

அந்தக்காலத்தில் மாதம் மும்மாரி மழை பெய்ததாம். அது மாறி இப்போது ஆண்டு மும்மாரி பெய்வதே அபூர்வமாகிவிட்டது. இது எதனால் என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்.